Tuesday, November 25, 2008

மகாபாரதம் - ஒரு மகா காவியம்

எதற்காக இதிகாசங்கள் படிக்கப் பட வேண்டும் ?

நமது புத்தக வாசிப்பு பழக்கம் என்பது ஒரு மணி நேரமோ அல்லது சுவாரஸ்யமாக இருந்தால் சில மணி நேரங்களுக்குள்ளே முடிந்து போய்விடக்கூடியது. இதிகாசங்களோ பல நூறு பக்கங்கள் கொண்டதாக இருக்கின்றன. வாசிக்க நிறைய நாட்கள் தேவைப்படுகின்றன. அத்தோடு அவற்றால் நமக்கு என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது என்ற எண்ணம் உருவாவது இயல்பு தான்.நமது அன்றாட வாசிப்பு குளத்தில் நீந்துவது போன்றது. இதிகாசம் கடலில் நீந்தும் அனுபவம். கடலில் நீந்தும்போது நாம் எல்லையற்ற பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை உணர்வோம். அதே நேரம் நாம் நீந்தும் கடலின் அடியாழத்தில் எத்தனையோ மலைகள் புதையுண்டு இருக்கின்றன. கோடானகோடி உயிர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி பட்டது தான் இதிகாசங்களை வாசிப்பதும்.
எல்லா இதிகாசங்களும் மக்களின் நினைவு தொகுப்புகளே. ஒட்டுமொத்தமான மனப்பதிவுகளின் ஒரு சேகரம் என்று கூட சொல்லலாம்.

மகாபாரதம் என்னும் மகா காவியம்

இந்திய சமூகத்தின் ஆதிநினைவுகள் இதிகாசங்களில் பதிவாகியிருக்கின்றன. இந்திய மனது கொண்ட எழுச்சியும் தடைகளும் அதில் காணக்கிடைக்கின்றன. அதேநேரம் நமது கதை சொல்லும் மரபின் உச்சபட்ச சாதனையாகவும் அது திகழ்கிறது.
மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் சூதர்களால் பாடப்பட்டு தான் இலக்கியவடிவம் பெற்றிருக்கின்றன. சூதர்கள் பாடிய மகாபாரதத்தின் பெயர் ஜெயா. அதாவது வெற்றி. வெற்றியை பாடுகின்ற பாடல். ஆனால் வெற்றியை மட்டும் அது கவனம் கொள்ளவில்லை. இந்திய சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், நகரங்கள் உருவாக்கபட்டதையும், கானகம் எரிக்கபட்டு வனகுடிகள் துரத்தபட்டதையும், அரசாட்சியில் ஏற்பட்ட உள்குழப்பங்கள். மாற்றங்களையும் சேர்ந்தே விவரிக்கிறது.
மகாபாரதத்தை முழுமையாக ஒரு முறை வாசித்து தெரிந்து கொள்வதற்கு குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு தேவைப்படும். நம்மில் பெரும்பாலோர் வாசித்துள்ள மகாபாரதம் மிகவும் சுருக்கப்பட்ட பிரதியாகும். அது தண்ணீரில் பார்க்கும் நிலவின் தோற்றம் எனலாம்.
ஆதிபர்வம், சபா பர்வம், ஆரண்ய பர்வம், விராட பர்வம், உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சப்திக பர்வம், ஸ்ரீபர்வம், சாந்தி பர்வம், அனுசாசன பர்வம், அஸ்வமேதிக பர்வம், ஆச்ரமவாச பர்வம், மௌசால பர்வம், மகாபிரதஸ்தானிக பர்வம், சொர்க்கரோக பர்வம். என்று பதினெட்டு பருவங்களாக கிட்டதட்ட பதினைந்தாயிரம் பக்கங்கள் கொண்ட மகாபாரதப் பிரதி ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே தமிழில் வெளியாகியிருக்கிறது.
பொதுவில் இதிகாசங்களை நேரடியாக நாமே வாசிப்பதை விடவும் ஒருவர் வாசித்து பொருள் சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்வது எளிய வழி. அதன் பிறகு நாமாக படிக்க துவங்கலாம். ஆனால் இதற்கு ஒரு ஆசான் தேவை. அவர் இதிகாசத்தில் ஊறித்திளைத்தவராக இருத்தல் வேண்டும். அப்படி மகாபாரத்தில் ஊறித்திளைத்தவர்கள் நூற்றுக்கணக்கில் இந்தியாவில் இருக்கிறார்கள். மகாபாரதத்தை மட்டுமே ஆய்வு செய்வதற்கு பூனாவில் தனியான ஆய்வு நிறுவனமே இருக்கிறது.இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் மகாபாரதம் அங்கே தான் நடைபெற்றது என்ற நம்பிக்கையும் சில நினைவிடங்களும் உள்ளன.

இதிகாசங்களை வாசிப்பது எப்படி? -

இதிகாசங்களை வாசிப்பது தனியானதொரு அனுபவம். ஒரு நாவல்,சிறுகதை, கவிதைப் புத்தகம் வாசிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மகிழ்ச்சியும் பல்வேறுபட்ட உணர்வெழுச்சிகளும் தரக்கூடியது. பொதுவில் இதிகாசங்களை வாசிப்பது எளிதானதில்லை. அதற்கு வாசிக்கும் ஆர்வத்தை தாண்டிய சில அடிப்படைகள் தேவைப்படுகின்றன.

அந்த அடிப்படைகளில் பத்து விஷயங்கள் மிக முக்கியமானது

1) இதிகாசத்தை ஒரே மூச்சில் வாசித்து விட வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டுவிட வேண்டும். பொறுமையும், ஆழ்ந்த வாசிப்பும் மிக அவசியம்.

2) எந்த தேசத்தின் இதிகாசமாக இருந்தாலும் அதை வாசிப்பதற்கு மூலப்பிரதியைத் தவிர அதோடு தொடர்புள்ள புராணீகம். வரலாறு, பண்டைய சமூக, கலாச்சார வாழ்வு குறித்த அடிப்படைகள், மற்றும் மொழி நுட்பம், குறீயிட்டு பொருள்கள் போன்றவற்றை புரிந்து கொள்வது அவசியம்

3) இதிகாசத்தில் வெளிப்படும் அறம் மற்றும் நீதி கருத்துகள், தத்துவ விசாரம் குறித்து எளிய அறிமுகமாவது அவசியம் அறிந்திருக்க வேண்டும். அத்தோடு அதை இன்றைய கண்ணோட்டத்திலிருந்து விமர்சிக்கும், கண்டிக்கும் மனநிலையை சற்றே ஒதுக்கி வைத்துவிட வேண்டும்

4) இதிகாசங்கள் தன்னளவில் இயல்பும் அதீதமும் ஒன்று கலந்தவை. கடவுளும் மனிதனும் ஒன்று சேர்ந்து இயங்கும் வெளியது. அதில் எது இயல்பு எது அதீதம் என்று பிரித்தெறிவது சுலபமானதில்லை. இயல்பு, அதீதம் என்பது பற்றி இன்றுள்ள நமது அறிவும் புரிதலும் இதிகாசங்களை வாசிக்கையில் நிறைய மனத்தடைகளை உருவாக்ககூடும். ஆகவே அதையும் சற்றே விலக்கி விட்டு வாசிக்கத் துவங்க வேண்டும்

5) நாவல் போல சிறுகதை போல கதை சொல்லும் முறை ஒன்றிரண்டு மையங்களுக்குள்ளோ, முக்கியமான ஒற்றை சரடிலோ இதிகாசத்தில் இயங்குவதில்லை. ஆகவே பன்முகப்பட்ட கதையிழைகளும், சிறியதும் பெரியதுமான நிறைய கதாபாத்திரங்களும், முன்பின்னாக நகரும் நிகழ்வுகளும், குறியீடுகளும் சங்கேதங்களும், தத்துவ விசாரணைகளும், கவித்துவ உச்சநிலைகளும், அக தரிசனங்களும் உள்ளடக்கியது என்பதால் அவற்றை உள்வாங்கவும் நமக்குள் தொகுத்துக் கொள்ளவும் ஆழ்ந்த கவனம் தேவைபடுகிறது

6) இதிகாசத்தின் கட்டமைப்பு மிக முக்கியமானது. அதன் ஒவ்வொரு பகுதியும் தன்னளவில் முழுமையானது. அதே நேரம் ஒன்று சேரும் போது விரிந்த அனுபவம் தரக்கூடியது. ஆகவே அந்தக் கட்டமைப்பின் ஆதாரப்புள்ளியை அறிந்து கொள்வது அவசியமானது. இதிகாசம் ஒரு பிரம்மாண்டமான பேராலயம் போன்ற தோன்றம் கொண்டது. அதற்கு நிறைய உள்அடுக்குள், ரகசிய வழிகள், சாளரங்கள் இருக்கின்றன. அதே நேரம் இந்த கட்டமைப்பு பெரிதும் மாயத்தன்மை கொண்டது என்பதால் எது நிஜம் எது பிம்பம் என்று கண்டறிவதில் குழப்பம் ஏற்படக்கூடும். ஆகவே இதிகாசம் துவங்கும் இடத்தில் கதை துவங்குவதில்லை. இதிகாசம் முடியும் இடத்தில் கதை முடிந்துவிடுவதில்லை.

7) இதிகாசம் கவிதையின் உச்சநிலை. ஆகவே உன்னதமான கவித்துவ எழுச்சியும் உத்வேகமும் அதிகம் காணமுடியும். கதாபாத்திரங்களின் உணர்ச்சிநிலைகளையே இதிகாசம் முக்கியம் கொள்கிறது. அதிலும் இயற்கையும் கதாபாத்திரங்களின் மனநிலைகளும் பிரிக்க முடியாதவை. ஆகவே இயற்கையை பற்றிய விவரிப்புகள் மிக முக்கியமானவை.

8) இதிகாசத்தின் பின்னால் இயங்குவது ஒரு நாடோடி மனம். அது எண்ணிக்கையற்ற பாடல்களால் நிரம்பியது. மனிதர்கள் அறிந்த கதையை அவர்கள் அறியாத வண்ணம் சொல்கிறது. அதன் குரல் புராதனமானது. ஆகவே கதை சொல்பவன் ஆழ்ந்த பெருமூச்சுடன் சில நேரங்களில் கதையை விவரிக்கிறான். சில நேரங்களில் உன்மத்தம் ஏறிக் கதையை சொல்கிறான். சில வேளைகளில் சந்நதம் கண்டவன் போல துள்ளுகிறான். சில தருணங்களில் அவன் குரல் பைத்தியநிலையை எட்டுகிறது. இந்த பன்முகப்பட்ட குரல்கள் தான் இதிகாசத்தின் தனிச்சிறப்பு. அதை நுட்பமாக உணர்ந்து கொள்ள வேண்டும்

9) இதிகாசத்திற்கு உடல் இருக்கிறது. அதன் கண் எது, காது எது, எது இதயம், எது கைகால்கள் என்பதை வாசிப்பின் மூலம் ஒரு தேர்ந்த வாசகன் கண்டுபிடித்துவிட முடியும். இதை தான் பலவருடமாக இதிகாசம் வாசிப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

10) இதிகாசங்கள் மதப்பிரதிகள் அல்ல. அவை மதம், மெய்தேடல், உயர்தத்துவ விசாரணை போன்றவற்றை விவரித்தாலும் அவை ஒரு சமூகத்தின் நினைவு தொகுப்புகள் . இதிகாசம் நிறைய கிளைகள் கொண்டது. அதில் ஒன்று தான் மதம்.
படைப்பு - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=166&page=

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger