Tuesday, March 10, 2009

அறிவோம் ஆழ்வார்களை




வைணவத்திற்கும், தமிழுக்கும் அரிய கொடைகளை அள்ளி வழங்கிய ஆழ்வார்களைப் பற்றிய சுருக்கமான ஒரு தொகுப்பு இது. ஆழ தெரிந்தவர்களுக்கு சிறிய விஷயமான இது புதியவர்களுக்கு ஒரு அத்தியாவசியமான அறிமுகம்.என்னைப் பொருத்தவரை இது ஒரு சேமிக்கப்பட வேண்டிய அரிய தகவல் பெட்டகம்.

ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர்.

1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) திருமழிசை ஆழ்வார்
5) நம்மாழ்வார்
6) திருமங்கையாழ்வார்
7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
8) பெரியாழ்வார்
9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார்
11) மதுரகவி ஆழ்வார்
12) திருப்பாணாழ்வார்

பொய்கை ஆழ்வார்

கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் 1 திருவோண நட்சததிரத்தில், காஞ்சீபுரத்தில் பிறந்தார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.மஹாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான திருச் சங்கின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். திருவெஃகா என்பது காஞ்சிபுரத்தின் ஒரு பகுதி. விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் இத்திருத்தலத்தில் யதோத்தகாரி என்ற பெருமாள் கோயிலின் பொய்கையில், இவர் ஒரு பொற்றாமரையில் அவதரித்ததாகவும், அதனாலேயே இவருக்குப் பொய்கையாழ்வார் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பூதத்தாழ்வார்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்மல்லை என்றழைக்கப்படுகின்ற தலத்தில் பொய்கையாழ்வாரின் காலத்திலேயே வாழ்ந்தவர். அதே சித்தார்த்த ஐப்பசி மாதம் அவிட்ட நட்சத்திரம் கூடிய நாளில் ஒரு நீலோற்பல மலரில் அவதரித்தார். கௌமோதகி என்ற கதையின் அம்சமாகக் கருதப்படும் எம்பெருமான் ஸ்தலசயனப் பெருமானைத் துதித்துப் பாசுரங்கள் பல பாடியுள்ளார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.

பேயாழ்வார்

திருமயிலை என்றழைக்கப்படுகின்ற மயிலாப்பூரில் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். சித்தார்த்த வருடம் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் குளத்தில் ஓர் செவ்வல்லி மலரில் அவதரித்தார் என்பது புராணம். ஸ்ரீமந் நாராயணின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான நாந்தகம் என்கின்ற வாளின் அம்சமாக இவர் கருதப்படுகிறார். முதல் ஆழ்வார்களுள் ஒருவர்.

திருமழிசை ஆழ்வார்

எம்பெருமானைத் தம் நண்பனாகப் பாவித்துப் பல பாசுரங்கள் பாடியுள்ளார். இவர் அவதரித்தது திருமழிசை என்ற ஊரில். தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். திருமழிசைப் பிரான் என்றழைக்கப்பட்ட இவர் எம்பெருமானின் சுதர்சன சக்கரத்தின் அம்சமாகக் கருதப்படுகிறார்.இவர் தன் வளர்ப்புப் பெற்றோருக்குப் பிறந்த கணிக் கண்ணனைத் தன் சீடனாக ஏற்று பொய்கையாழ்வார் வாழ்ந்த திருவெஃகா சென்று யதோத்தகாரிப் பெருமானை ஸேவித்து தியானம் செய்தார். பின்னர் கணிக்கண்ணனுடன் திருக்குடந்தை சென்று ஆராவமுதப் பெருமான் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.திருச்சந்த விருத்தம், நான்முகன் திருவந்தாதி என்று பரமனின் மீது பல பாசுரங்கள் இயற்றினார்.

நம்மாழ்வார்

திருநெல்வேலிக்கருகில் உள்ள திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் கி.பி.9ம் நூற்றாண்டில் பிரமாதி வருடம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். பிறந்து பல நாட்களுக்குப் பிறகும் கண்கள் மூடிய நிலையில் தாய்ப்பால் கூட அருந்தாமல் இருந்தார். ஆனால் நல்ல உடல் நலத்துடன் இருந்தார். வாயிலிருந்து ஒரு சொல் கூட வரவில்லை. சடகோபன் என்றும் அழைக்கப்பட்ட இக்குழந்தை இவ்வுலக ஆசா பாசங்களிலிருந்து விலகி இருந்தான். வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணனின் அன்புக்குப் பாத்திரமான விஷ்வக்ஸேனனின் அம்சமாக நம்மாழ்வார் கருதப்படுகிறார். திருவரங்கனே தன் அன்பன் சடகோபனை `நம்மாழ்வார்‘ என்று அழைத்ததாக வரலாறு கூறுகிறது.இடைப்பட்ட 600 ஆண்டு காலத்தில் பல ஆழ்வார்களால் இயற்றப்பட்ட திவ்யப் ப்ரபந்தங்கள் வழக்கிலில்லாமல் போனதாகவும், திருநாத முனிகள் தம் தவமுயற்சியால் நம்மாழ்வாரை யோகநிலையில் தொடர்பு கொண்டு பாசுரங்களுக்குப் புத்துயிர் அளித்துப் பெருமாள் கோயில்களில் இசைக்க வைத்ததாகவும் கூறுவர்.

திருவிருத்தம், திரு ஆசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, எனும் நான்கு தமிழ் மறைகளை வழங்கினார் நம்மாழ்வார். இவற்றில் வைணவத்தின் பொக்கிஷமாகக் கருதப்படும் திருவாய்மொழி 1102 பாசுரங்களைக் கொண்டது.

திருமங்கையாழ்வார்

சோழநாட்டில் திருமங்கை மன்னனாக இருந்து பின் இறைவனின் தொண்டனாகி எம்பெருமானின் அடியவர்க்காக வாழ்ந்தவர். 8வது நூற்றாண்டில் சோழவளநாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் நளவருடம், கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தில் அவதரித்தார். பெற்றோர் இவருக்கிட்ட பெயர் நீலன்.இவர் எம்பெருமானின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்ககூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல் என்ற ஆறு பிரபந்தங்களில் 1137 பாசுரங்களாக இயற்றியுள்ளார்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

எம்பெருமானின் அடிமையாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு பரமனை மாலைகள் அணிவித்துப் பார்த்து விப்ர நாராயணராக வாழ்ந்தவர். சோழநாட்டில் திருமண்டங்குடி என்ற சிற்றூரில் பராபவ வருடம், மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். பெருமானின் வைஜயந்தி வனமாலையின் அம்சமாகக் கருதப்படும் இவர் திருவரங்கனைத் தம் பாசுரங்களால் பாடித் துதித்து மற்ற திவ்ய தேசக் கோயில்களுக்கும் விஜயம் செய்தார்.ஸ்ரீமந் நாராயணணின் பக்தர்களின் காலடி மண்ணைத் தம் தலையிலிட்டுக் கொண்டு தொண்டரடிப்பொடி என்ற பெயர் பெற்றார்.

பெரியாழ்வார்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் கி.பி.9ம் நூற்றாண்டில், குரோதன வருடம், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார். கருடாழ்வாரின் அம்சமாகக் கருதப்படும் இவர் விஷ்ணுசித்தர் என்றழைக்கப்பட்டார்.

கண்ணபிரானின் கதைகளைப் பெற்றோர் மூலம் கேட்டறிந்த விஷ்ணு சித்தர் அவன் பக்தியில் திளைத்தார். வட பத்ரசாயி என்ற ரங்க மன்னாருக்காக நந்தவனம் அமைத்து, துளசி மாலைகளை அன்றாடம் கோயிலுக்குச் சமர்ப்பித்தார். எம்பெருமானின் கட்டளைப்படி, பாண்டிய நாடு சென்று பரமனைச் சரணடைவது ஒன்றே முக்திக்கு வழிகாட்டும் என்ற தத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார். மன்னர் மகிழ்ந்து "பட்டர் பிரான்" என்ற பெயரை விஷ்ணு சித்தருக்களித்தார்.மன்னன் தமக்களித்த பொன் நகைகளை ரங்கனுக்கு அணிவித்து மகிழ்ந்தார். தம் நந்தவனக் கைங்கர்யத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு பூமாலையோடு, பாமாலையும் ஸ்ரீமந் நாராயணனுக்களித்து பெரியாழ்வார் என்ற பெயர் பெற்றார்.திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி போன்ற பிரபந்தங்களை இயற்றினார்.

ஸ்ரீ ஆண்டாள்


தென்பாண்டி நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் வீட்டு நந்தவனத்தில் நள ஆண்டு ஆடிப்பூரத்தன்று அவதரித்த கோதை நாச்சியார் கி.பி.9ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறிகிறோம்.

அரங்கனையே மனத்தில் மணாளனாக எண்ணி அவளுக்கு அணிவிக்கும் மாலையை தந்தை பெரியாழ்வாருக்குத் தெரியாமல் முதலில் தான் சூடிக் கொண்ட பிறகே கோயிலுக்கு எடுத்துச் செல்வார். இந்த சூடிக்கொடுத்த சுடர்கொடி ஒரு நாள் உண்மை தெரியவர, தந்தையின் கோபத்திற்கு ஆளானார்.ஆனால் ரங்க மன்னாரோ சூடியவளின் அன்பையுணர்ந்தவன். அவள் அணிந்த மாலையே தனக்கு வேண்டுமென்று பணித்து, "அவள் ஆண்டாள்" என்று அறிவித்து ஊரறியக் கைப்பிடித்துத் தன்னவளாக்கிக் கொண்டார். பரந்தாமனையே கைப்பிடித்து அவனில் ஐக்கியமான ஆண்டாள் பூதேவியின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவையும் 143 பாசுரங்களை கொண்ட நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் நமக்களித்த நான்முத்துக்கள்.

குலசேகர ஆழ்வார்

மலைநாடான சேர நாட்டைச் சேர்ந்த திருவஞ்சிக் கோலத்தில் கி.பி. 8ம் நூற்றாண்டில் பராபவ வருடம், மாசிமாதம், புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.ஸ்ரீமஹாவிஷ்ணுவின் கௌஸ்துபத்தின் அம்சமாக இவர் கருதப்படுகிறார்.
அரச குலத்தில் பிறந்த இவர் வடமொழியிலும் தேர்ச்சி பெற்று வில் வித்தை, வாள் பயிற்சி முதலியவற்றையும் பயின்றார். பாண்டிய அரசனின் மகளை மணந்து மணவாழ்க்கையில் ஈடுபட்டு, பல போர்களையும் வென்றார்.ஸ்ரீமந் நாராயணனே இவ்வுலக வாழ்க்கை மாயை என்பதை அவருக்குணர்த்திய பின் பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு, கடவுள் பக்தியைப் பரப்புவதே தன்கடமையென எண்ணினார். தன்னை யசோதையாகவும், கண்ணனைத் தன் குழந்தையாகவும் பாவித்துப் பல பாசுரங்கள் இயற்றினார். ராமாயணக் கதைகளைக் கேட்டுணர்ந்து ராமபக்தியில் மூழ்கித் திளைத்தார்.

பெருமாள் திருமொழி என்ற பெயரில் 105 பாசுரங்கள் இயற்றி திருவரங்கனுக்குக் கைங்கர்யம் செய்வதிலேயே காலம் கழித்துப் பரம பதமடைந்தார்.

மதுரகவி ஆழ்வார்

ஆன்மீகம் தழைத்து வந்த பாண்டிய நாட்டில் திருக்கோவூர் என்ற தலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் அவதரித்தார்.நம்மாழ்வார் பிறப்பதற்கு முன் அவதரித்திருந்தாலும், நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர் எனலாம்.
சிறு வயதிலிருந்தே ஸ்ரீமந் நாராயணனிடம் பக்திகொண்டு பரமனைப் போற்றிப் பாடிவந்தார். வடமொழிப் புலமையும் கொண்டிருந்தார்.ஒருநாள் பூஜைகள் நடத்திய பின்பு காட்டுத் தீயோ என்று எண்ணும் படியான பெரிய ஒளியைக் கண்டார். அந்த ஒளி நட்சத்திரமாக இவரைத் தெற்கு நோக்கி அழைத்து வந்தது. திருநகரி என்ற ஊரில் சென்று மறைந்தது. அங்கு கோயிலில் மரத்தடியில் 16 வருடங்களாகக் கண் மூடிய நிலையில் தவமிருந்த நம்மாழ்வாரைப் பற்றிக் கேள்விப் பட்டார். தம் அறிவுக் கூர்மையால் பேசாதிருந்த நம்மாழ்வாரைக் கண்திறக்கவும், பேசவும் வைத்தார்.நம்மாழ்வாருடைய தத்துவ விளக்கங்களைக் கேட்டறிந்து தலை மேல் கரம் குவித்து "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற பாசுர பாமாலை பாடி நம்மாழ்வாரையே தம் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார். அவரிடமிருந்து வேதங்களைக் கற்று பரமனின் திருவடிகளே சரணம் என்று பாசுரங்கள் பாடி மகிழ்ந்தார்.ஆலயத்தினுள்ளே நம்மாழ்வாரின் சிலை ஒன்றையும் நிறுவி ஸ்ரீமந் நாராயணனுக்கும், தம் ஆன்மீக குருவிற்கும் தினசரி பூஜைகள் செய்தும் பாசுரங்கள் பாடியும் பரமனை சேர்ந்தார்.

திருப்பாணாழ்வார்

சோழவள நாட்டின் தலைநகராக ஒருகாலத்தில் விளங்கிய உரையூரில் கி.பி.8ம் நூற்றாண்டில் காத்திகை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் பாணர் என்ற இசை வழிபாடு செய்யும் குலத்தில் அவதரித்தார்.ஸ்ரீமந் நாராயணனின் மார்பில் இருக்கும் ஸ்ரீவத்ஸம் என்கிற மருவின் அம்சமாக விளங்குகிறார்.
தீண்டத் தகாத குலத்தில் பிறந்தவர் என்று கருதப் பட்டதால் காவிரியைக் கடந்து அரங்கத்தம்மானைக் கண் குளிரக் காண முடியவில்லையே என்று வருந்தி, காவிரியின் அக்கரையில் நின்ற படியே திருவரங்கம் இருக்கும் திசை நோக்கித் தவமிருந்தார்.தினசரி திருமஞ்சனம் செய்யும் உலோக சாரங்க முனிவரின் கனவில் தோன்றிய எம்பெருமான், அக்கரையில் தவமிருக்கும் திருப்பாணாழ்வாரை பட்டரின் தோளில் சுமந்து வரச்செய்து அவருக்குக் காட்சியளித்தார். தான் கண்ட காட்சியில் உள்ளம் நெகிழ்ந்து அரங்கனின் திருவடி தொடங்கி திருமுடி வரை வர்ணிக்கும் 10 பாசுரங்களைப் பாடினார்.

ஆண்டாளைப் போலவே அரங்கனிடம் அன்பு வைத்து அவனையே நினைந்து எம்பெருமானுடன் கலந்தார் என்பது புராண வரலாறு. தம் பாசுரங்களில் மனிதர்கள் எப்படி பக்தி மார்க்கத்தில் வாழ வேண்டும் என்ற முறைகளையும், பெருமானிடம் சரணாகதி அடைவதன் அவசியத்தையும் அழகாகப் பாடியுள்ளார்.

தகவல் உதவி:Dr. ரம்யா ராகவன்.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com and Archithings. Powered by Blogger